
தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளராக இளையராஜா அவர்கள் இருந்து வருகின்றார். 1976 ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதோடு 7000 பாடல்களை எழுதியும் உள்ளார். இவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இன்றளவிலும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இசைஞானியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட இருக்கின்ற நிலையில் அதில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க உள்ளார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகின்ற இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இசைஞானி லண்டனிலிருந்து பாரிஸ் நகருக்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் வரும் ‘ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா’ என்ற பாடல் பின்னணி இசையில் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.