தர்மபுரி மாவட்டம் இருமாத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் தங்கவேலின் மகன் வெற்றி வேல். கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கொத்தனாராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரிடம் அவருடைய உறவினரான இளம்பெண் ஒருவர் கையாளாக வேலை பார்த்தார். திருமணமான அந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

அந்தப் பெண்ணுக்கும் வெற்றிவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் போச்சம்பள்ளி பகுதியில் ஒரு வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இளம் பெண் திடீரென வேறொரு வாலிபருடன் செல்போனில் பேசியுள்ளார். இது வெற்றிவேலுக்கு தெரிந்த நிலையில் அவர் அந்த பெண்ணுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தன் வீட்டின் அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்த நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வெற்றிவேலின் உடலை மீட்க முயற்சித்த நிலையில், அந்த மரம் மிகவும் உயரமானதாக இருந்ததால் மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு வெற்றிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.