
மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் ஆதாரமாக எனது தொலைபேசி மூலம் என்னுடைய தொலைபேசி தகவல்கள் முழுவதையும் ஆவணமாக தாக்கல் செய்துள்ளார். இந்த ஆவணத்தில் நான் யார் யாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளேன் என்ற விவரங்களை இணைத்துள்ளார். என்னுடைய தனிப்பட்ட ஆவணங்களை என்னுடைய அனுமதி இல்லாமல் அவர் சமர்ப்பித்துள்ளார்.
இதனால் பரமக்குடி நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தேன். ஆனால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியதாவது, இந்த வழக்கில் கணவர் சமர்ப்பித்த மனைவியின் தொலைபேசி ஆவணங்கள் அவரது தலையீடு இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி ஆவணங்களை பெற அதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு மனைவியின் விபரங்களை கேட்டறிந்து ஓடிபி மூலம் கணவர் பெற்றிருக்க வேண்டும்.திருமண உறவில் நம்பிக்கை வேண்டும்.மனைவியின் உரிமை இன்றி அவரது தனிப்பட்ட தகவல்களை ஆதாரமாக சமர்ப்பிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒருவரின் தனி உரிமை ஆவணங்களை ஆதாரமாக சமர்ப்பிப்பதை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
இந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தள்ளுபடி ரத்து செய்யப்படுகிறது.மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி மின்னணு சம்பந்தப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்கும் போது மின்னணு வல்லுனர்களின் கையெழுத்து இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மின்னணு வல்லுநர்கள் யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. எனவே இந்த சட்டத்தின் கீழ் இது மாதிரியான மின்னனு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு முன் வல்லுநர்கள் சான்றளிக்க வேண்டும். இதற்கான தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மூன்று மாதத்திற்குள் நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.