பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும். முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.

ஒரு பெண்ணின் தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில், அந்த பெண்ணிற்கு திருமணமானாலும் சரி, ஆகவில்லை என்றாலும் சரி, எல்லா வாரிசுகளுக்கும் பெண்களுக்கும் பங்கே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு. ஆனால் ஒருவேளை அந்த ஆண் தனது சொத்தை ஒருத்தருக்கு உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கோர முடியாது.