
இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வீரர்கள் மட்டுமின்றி டிஸ்னி ஹாட்ஸ்டாரும் பெரிய சாதனை படைத்துள்ளது..
2023 ஆசிய கோப்பை இன் சூப்பர் 4 இல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரபரப்பான போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் மழையுடன், இந்திய பேட்ஸ்மேன்களும் அசத்தலாக பேட் செய்தனர். இந்தியா 356 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு குல்தீப் யாதவின் மாயாஜால சுழலால் பாகிஸ்தான் அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைபெற்ற நிலையில் ரசிகர்கள் கொண்டாடினர்.
அதேநேரத்தில் இந்தியாவுடன், இந்த உயர் மின்னழுத்த போட்டியை நேரடியாக ஒளிபரப்பிய டிஸ்னி ஹாட்ஸ்டார், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் சாதனை படைத்தது. இந்த தகவலை பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஜெய் ஷா கூறுகையில், மழையால் 2 நாட்களில் முடிவடைந்த இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் போட்டியை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 2.8 கோடி பேர் நேரடியாக பார்த்துள்ளனர்” என்றார்.
ஜெய் ஷா தனது ட்விட்டர் பதிவில், ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று (செப்டம்பர் 11ஆம் தேதி) 2.8 கோடி பேர் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை டிஜிட்டல் முறையில் நேரடியாக பார்த்துள்ளனர். முன்னதாக, 2019 உலகக் கோப்பையின் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான அரையிறுதிப் போட்டியின் போது 2.52 கோடி மக்கள் நேரலையில் இருந்தனர். அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
முதல் சூப்பர் 4ல் இந்திய அணி வெற்றி :
கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாபர் அசாம் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ஆனால் இந்திய தொடக்க ஜோடியான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் இருவரும் அரைசதமடித்து 121 ரன்களில் சக்திவாய்ந்த தொடக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு மழை குறுக்கிட்டதால் ரிசர்வ் நாளில் ஆட்டம் நடைபெற்றது. அப்போது விராட் கோலியும், கே.எல்.ராகுலும் 3வது விக்கெட்டுக்கு 233 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். பாகிஸ்தான் அணிக்கு ஒரு விக்கெட் கூட எடுக்க வாய்ப்பளிக்காமல் ரன்களை குவித்தனர்.
விராட் கோலி அதிரடியாக ஆடி 122 ரன்கள் எடுத்தார். மேலும் கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய கே.எல்.ராகுல், பாகிஸ்தானுக்கு எதிராக 111 ரன்கள் எடுத்து தனது ஃபார்ம் மற்றும் உடற்தகுதி இரண்டையும் நிரூபித்தார். பாகிஸ்தானுக்கு முன்னால் 356 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியா அமைத்த பிறகு, பாகிஸ்தான் அணியால் துரத்த முடியவில்லை. பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸ் 128 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதனால் 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
இறுதிப்போட்டியில் இந்திய அணி :
இதனிடையே நேற்று சூப்பர் 4 போட்டியில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி 41.3 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது..
Today’s #INDvsPAK has clocked 2.8 Crore concurrent users on @DisneyPlusHS – the highest for any India match in the history of digital. The previous best was #INDvsNZ 2019 @cricketworldcup semifinal with 2.52 Crore concurrent users 🇮🇳 #AsiaCup@StarSportsIndia
— Jay Shah (@JayShah) September 11, 2023