
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் தோமஸ்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முன்னதாக 5 ஆண்டுகள் குவைத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி யோர்டானியவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தனது நண்பரான எடிசன் உடன் சேர்ந்து யோர்டானிய எல்லையை கடந்து இஸ்ரேலுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அங்குள்ள பாதுகாப்பு படையினர் அவரை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் அவரது நண்பர் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு சமீபத்தில் திருவனந்தபுரத்திற்கு வந்துள்ளார். ஆனால் தோமஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து இந்திய தூதரகம் அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தது.
இதுகுறித்து அவர் மனைவி கூறியதாவது அவர் என்னை கடைசியாக தொடர்பு கொண்ட போது வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார். எனக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார் என்று தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவியின் சகோதரி தெரிவித்ததாவது, எங்கள் உறவினரின் மகன் லண்டனில் இருக்கிறார். அவர்தான் இந்த சம்பவத்தை எங்களுக்கு தெரிவித்தார். அவர் இஸ்ரேலுக்கு செல்லும் திட்டத்தை யாரிடமும் தெரிவிக்கவில்லை என்றும், யோர்டானியவில் இருக்கும்போது ஒருமுறை மட்டும் தொடர்பு கொண்டு தனது மனைவியிடம் தகவலை தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அவர்களது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு அவரது உடலை மீட்டு கொண்டுவர இந்திய அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.