
இந்தோனேசியாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செர்ஜி அட்லாவுய் என்பவர் போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இவர் மீதான வழக்கை விசாரித்த இந்தோனேசியா நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் முடிவில் அவருக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால் பிரான்ஸ் அரசாங்கம் கொடுத்த அழுத்தத்தால் தண்டனை ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. பிரான்ஸ் அரசு தரப்பில் செர்ஜி அட்லாவுய்யை அவரது உடல்நிலையை காரணம் காட்டி சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் ஜனவரி மாதம் 24 ஆம் தேதி இரு நாடுகளிடையே ஒப்பந்தம் நடைபெற்றது.
அதன்படி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செர்ஜி அட்லாவுய் (61) தனது சொந்த நாடான பிரான்ஸிற்கு அனுப்பி வைக்க இந்தோனேசியா நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பிரான்ஸ் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் அவருக்கான தண்டனையை பிரான்ஸ் அரசாங்கத்திடமே இந்தோனேஷியா விட்டுள்ளது.