
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டி மழையால் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடியாக தொடங்கினர். முதலில் மெதுவாக ஆரம்பித்த ரோகித் சர்மா பின் சதாப்கான் ஓவரில் சிக்ஸர்களாக விளாசினார். தொடர்ந்து இருவருமே சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.
இந்திய அணி 100 ரன்களை கடந்த பின் ரோகித் சர்மா ஷதாப் கான் வீசிய 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஷஹீன் அப்ரிடியின் 18வது ஓவரில் கில் அவுட் ஆனார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர்.
அப்போது திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. மைதானம் தார்பாயால் மூடப்பட்ட நிலையில், மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்தது. மேலும் மீண்டும் மழை வந்த காரணத்தால் ரிசர்வ் டேவான நாளை,அதாவது இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. கோலியும் (8* ரன்கள்), ராகுலும் (17* ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், மீண்டும் கொழும்பில் மழை பெய்த காரணத்தால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, போட்டி 4:40 மணியளவில், ஓவர்கள் குறைப்பு இல்லாமல் மீண்டும் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி தற்போது கே எல் ராகுலும், விராட் கோலியும் ஆடி வருகின்றனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூப்பர் 4ல் இந்தியாவுக்கு எதிராக ஹாரிஸ் ரவூப் பந்துவீச மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Good news: Play to resume at 4:40 IST. No reduction in overs. #TeamIndia #INDvPAK #AsiaCup https://t.co/KHAQ9Va5uq
— BCCI (@BCCI) September 11, 2023