
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் எதிரான சூப்பர் போர் போட்டியில் கே எல் ராகுல், விராட் கோலி சதம் அடித்ததால் பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடியாக தொடங்கினர். தொடர்ந்து இருவருமே சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.
இந்திய அணி 100 ரன்களை கடந்த பின் ரோகித் சர்மா, கில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர். அப்போது திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. பின் மைதானம் தார்பாயால் மூடப்பட்ட நிலையில், மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், மைதானத்தில் ஈரப்பதம் அதிகம் இருந்தது. மேலும் மீண்டும் மழை வந்த காரணத்தால் ரிசர்வ் டேவான செப்டம்பர் 11, அதாவது இன்று பிற்பகல் 3 மணிக்கு போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது. கோலியும் (8* ரன்கள்), ராகுலும் (17* ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மாலை 3 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், மீண்டும் கொழும்பில் மழை பெய்த காரணத்தால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து, போட்டி 4:40 மணியளவில், ஓவர்கள் குறைப்பு இல்லாமல் மீண்டும் தொடங்கியது. அதன்படி தற்போது கே எல் ராகுலும், விராட் கோலியும் களமிறங்கி சிறப்பாக ஆடினர்.
பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர் கொண்ட இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்து அசத்தினர். காயத்திலிருந்து மீண்டு வந்த கே.எல் ராகுல் தனது 6வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். மேலும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது 47வது சதத்தை பதிவு செய்தார் விராட் கோலி. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ரன்களை கடந்து இந்திய வீரர் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். கே எல் ராகுல் 106 பந்துகளில் (12 பவுண்டரி, 2 சிக்ஸர்) 111 ரன்களும், விராட் கோலி 94 பந்துகளில் (9 பவுண்டரி, 3 சிக்ஸர்) 122 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் எடுத்துள்ளது.
📸📸
The two centurions for #TeamIndia 💪💪 pic.twitter.com/mdMg5lNYHP
— BCCI (@BCCI) September 11, 2023