
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பம்மது குளம் பகுதியில் ஒரு அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்த நிலையில் 566 மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பதாக போலி கணக்கு காட்டியுள்ளனர். ஆனால் வெறும் 219 மாணவர்கள் மட்டும்தான் அந்த பள்ளியில் படித்துள்ளனர். இந்தப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திடீரென ஆய்வு நடத்திய நிலையில் இந்த மோசடி அம்பலமானது. இதைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லதா, வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது போலியாக மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் காட்டியதால் தற்போது பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
அதாவது இதே போன்று வேறு சில பள்ளிகளிலும் போலி மாணவர்கள் சேர்க்கை குறித்த மோசடிகள் அரங்கேறி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.