
சென்னை மாநகராட்சியில் 954 பொது கழிவறைகள் உள்ளது. இந்த கழிவறைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்த நிலையில் பல கழிப்பறைகள் சுகாதாரமின்றி இருந்தது. இதன் காரணமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 640 கழிவறைகளை தனியார் மூலமாக பராமரிப்பதற்கு சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் பிறகு தலா 25 லட்சம் ரூபாய் செலவில் 150 புது கழிவறைகளும் கட்டப்படுகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கழிவறைகள் குறித்து ஏதேனும் புகார் இருந்தால் 1913 என்ற நம்பரில் தெரிவிக்கலாம். இந்நிலையில் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட கழிவறைகளில் க்யூஆர் கோடு ஒட்டப்பட்டுள்ளது. இந்தக் கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதில் பலவிதமான புகார்கள் தோன்றும். அதில் உங்களுடைய புகாரை தேர்ந்தெடுத்து ஆம் அல்லது இல்லை என பதில் அளித்தால் உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதன் மூலம் கழிவறைகள் தூய்மையான முறையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.