
IPL கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிக்கொண்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியானது 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்து குவித்தது. அபாரமாக விளையாடிய யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ் பட்லர் இரண்டு பேரும் தலா 54 ரன்கள் குவித்தனர். அதேபோல் கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் அடித்தார்.
அதன்பின் 204 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்குடன் ஐதராபாத் அணியானது களம் இறங்கியது. முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகள் விழுந்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, பின் களமிறங்கிய ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தனர். அதனை தொடர்ந்து மயங்க் அகர்வால், ஹாரி ப்ரூக் ஜோடி விளையாடினர்.
அதேபோன்று வாஷிங்டன் சுந்தர் (1), கிளென் பிலிப்ஸ் (8) ஆகியோரும் விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதேநேரம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களே எடுத்தது. அதன்பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது.