தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சில மாதங்களுக்கு முன் பேட்டியில் கூறிய வார்த்தை சமீபத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில்,”ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்து பேச வேண்டும்”என்று பேசிய வீடியோ சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது, நான் தமிழக அமைச்சர். அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாரோ வேண்டுமென்றே இந்த வீடியோவை எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

அன்று நடந்த நிகழ்ச்சியில் நான் கூறியது, “நீங்கள் பின்தங்கி இருக்கிறீர்கள், இப்போது படித்து முன்னேறி வரும் நீங்கள் அரச பதவிக்கு வந்தால் அனைத்து சமுதாய மக்களையும் அனுசரித்து பணியை நடத்த வேண்டும்” என்று தான் கூறினேன். வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு வதந்திகளை பரப்ப வேண்டும். நான் ஆண்ட பரம்பரை என்ற வார்த்தை பயன்படுத்தியதற்கு காரணம் ராஜ ராஜ சோழன் சோழ மன்னர்களின் ஆட்சி முறைகளை குறித்து கூறினேன். அந்த சம்பவம் நேற்று நடந்தது அல்ல. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனை தற்போது எடிட் செய்து தவறான முறையில் சித்தரித்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். என்று கூறினார்.