தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம் பட்டியில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அறக்கட்டளை சார்பில் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ். இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தலைமையாசிரியர் பொன்ராஜ் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது மாணவர் ஒருவர் தலைக்கு மேலே பறக்கக்கூடிய விமானத்தில் நாமெல்லாம் பறப்போமா? என ஏக்கத்துடன் கேட்டுள்ளார். மேலும் ரயில் நிலையம் அருகே இருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட ரயிலில் பயணத்தில்லை என மாணவ- மாணவிகள் கூறியது தலைமை ஆசிரியரை மிகவும் கவலை அடைய செய்துள்ளது.

இதனால் பொன்ராஜ் தனது சொந்த செலவில் 3 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு 18 மாணவ மாணவிகளை அழைத்து செல்வதற்கு முன்பதிவு செய்துள்ளார். அதன்படி இன்று காலை தலைமை ஆசிரியர் உட்பட 18 மாணவ மாணவிகளும் சென்னைக்கு விமான மூலம் பயணிக்க உள்ளனர். மேலும் சென்னையில் உள்ள வண்டலூர் பூங்கா மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் போன்றவற்றை மாணவ மாணவிகளுக்கு சுற்றிக்காட்ட தலைமை ஆசிரியர் முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அதன் பின் நாளை மாலை சென்னையில் இருந்து முத்துநகர் ரயில் மூலம் தூத்துக்குடிக்கு வர உள்ளனர். இதுகுறித்து பள்ளி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆர்வமுடன் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் தங்களது பள்ளி தலைமை ஆசிரியருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறியதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பண்டாரம் பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் பாடம் சம்பந்தமாக மாணவர்களை தனது சொந்த செலவில் எங்காவது அழைத்து சென்று பார்வையிட வைப்பது வழக்கமாக வைத்துள்ளேன்.

இந்தாண்டு போக்குவரத்து என்ற தலைப்பில் நடத்தப்பட்ட விவாதத்தின் போது ரயில் மற்றும் விமானங்களில் போவதையே கனவாக கொண்டுள்ள மாணவ மாணவிகளின் ஏக்கம் எனக்கு மிகவும் கஷ்டத்தை அளித்தது. எனவே விருப்பப்பட்ட மாணவர்களை ரயில் மற்றும் விமானம் மூலம் அழைத்துச் செல்ல விரும்பினேன். இதற்கு சுமார் ரூபாய் 1,70,000 செலவு ஆகியுள்ளது. இருப்பினும் மாணவர்களின் மகிழ்ச்சியை காண்பது தனக்கு அளவில்லாத ஆனந்தத்தை கொடுத்ததாகவும், தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இவரது செயலை பாராட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.