
திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புத்தூர் அருகே கிடாரம் பகுதியில் வசித்து வந்தவர் சிவசுப்பிரமணியன் (51). இவருக்கு மகன் ஸ்ரீ கார்த்திகேயன், மகள் ஸ்ரீநிதி(19) உள்ளனர். சிவசுப்பிரமணியன் லாரி உரிமையாளராக இருந்துள்ளார். இவரது மகள் ஸ்ரீநிதி தனியார் கல்லூரியில் கோயம்புத்தூரில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிவசுப்பிரமணியன் தனது குழந்தைகளுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மூவரும் இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி உள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் மோகனூர் உழவர் சந்தை அருகில் வந்த போது திடீரென எதிர்பாராத விதமாக சாலையில் வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் ஸ்ரீநிதி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த சிவசுப்பிரமணியத்தின் மகன் ஸ்ரீ கார்த்திகேயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.