யமுனை ஆற்றில் விஷம் கலந்திருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லிக்கு தண்ணீர் வழங்கும் யமுனை ஆற்றில் அரியானா மாநிலம் விஷத்தை வெளியேற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கெஜ்ரிவால் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் மீது வழக்கு போடப்படும் என்றும் அரியானா அரசு எச்சரித்தது. இவ்வாறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் அவர் அரியானா மற்றும் டெல்லி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, பல்லா கிராமத்தில் உள்ள ஆற்றிக்கு சென்றார்.

அங்கு ஆற்றின் நீரை தனது கையில் எடுத்து பருகினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, அரசியல் ஆதாயத்திற்காக மக்களின் மனதில் பயத்தை ஏற்படுத்தும் கருத்துக்களை கெஜ்ரிவால் கூறுகிறார். அதனால் நான் இன்று யமுனை நதியில் இருந்து தண்ணீர் எடுத்துப் பருகினேன். அரியானா அரசு யமுனை ஆற்றில் விஷத்தை கலப்பதாக அவர் கூறுகிறார். படுகொலை பற்றி பேசுகிறார். இப்பகுதியில் உள்ள நீரை பரிசோதித்துப் பார்த்ததில் விஷம் போன்ற ஏதும் கலக்கப்படவில்லை என்று நீர்வளத்துறை ஆணையம் கூறியுள்ளது கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு அரியானா மக்களை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அவமதிப்பதை போன்றது என்று கூறினார்.