
மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா என்னும் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் சிறுமிகளால் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவி, சிறுமிகளால் சரமாரியாக தாக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் வெர்சோவா யாரி ரோடு என்னும் பகுதியில் கடந்த இரண்டு வாரத்துக்கு பள்ளி மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு தீவிரமான நிலையில் அந்த சிறுமிகள், பள்ளி மாணவியை அடிக்க முடிவு செய்தனர். அதன்படி சிறுமிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மாணவியின் முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலான நிலையில் அதனை கண்ட வெர்சோவா காவல்துறையினர் தானே முன்வந்து விசாரணை நடத்தினர்.
அவர்களின் விசாரணையில் பள்ளி மாணவியும்,அவரை தாக்கிய சிறுமிகளும் யாரோடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுடைய ஏற்பட்ட தகராறால் சிறுமிகள் பள்ளி மாணவியை அடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பள்ளி மாணவி, சிறுமிகள் மற்றும் அவர்களது பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்தனர்.
அதன்பின் அவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினரால் கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவியை, சிறுமிகள் சேர்ந்து தாக்கும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.