
ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பாசிபிதா பகுதியில் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் விடுதியில் 6 ஆம் வகுப்பு மாணவரை பள்ளியின் மூத்த மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மாணவர் சமீபத்தில் தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையான தாக்குதலை கூறியுள்ளார்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கடந்த புதன்கிழமை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். அந்தப் புகாரின் படி பள்ளியில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், பள்ளி விடுதியில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மது அருந்தி கொண்டிருந்ததை பார்த்த பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்துள்ளார்.
இதற்கு பழிவாங்கும் விதமாக அந்த மாணவரை மூத்த மாணவர்கள் ஒரு அறைக்குள் தனியே பூட்டி வைத்து கம்பிகளால் பலமாக தாக்கியுள்ளனர். மேலும் கையை பிளேடு கொண்டு வெட்டியதுடன் காயத்தின் மீது உப்பு தூவி சிறுவனை வேதனைப்படுத்தி உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில மாணவர்கள் சிறுவன் தாக்கப்பட்டதை உறுதி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுதியில் இத்தகைய கொடூரமான சம்பவம் நடைபெறுவதற்கு பள்ளியின் பாதுகாப்பு குறைபாடுகள் தான் காரணம் என பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.