திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடியின் அருகே பாஜக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக நிர்வாகி நடிகர் சரத்குமார் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிவில் பத்திரிக்கையாளர்களிடம் சரத்குமார் தெரிவித்ததாவது, விஜய் அரசியலுக்கு வருவது குறித்து எனது கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். அரசியலுக்கு அனைவரும் வரவேண்டும் என்பதே எனது எண்ணம் ஆகும். விஜய் அரசியலுக்கு வந்தது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் விஜய் எதை கூறும் முன்பும் சற்று சிந்தித்து கூறவேண்டும்.

நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை பற்றி விஜய் மாநாட்டில் கூறியதற்கு ஏற்கனவே நான் பதில் அளித்து விட்டேன். தற்பொழுது மணிப்பூர் பற்றி விஜய் கருத்து தெரிவித்திருக்கிறார். மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே ஏற்படும் பல ஆண்டு பிரச்சனையை மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு சமரசம் நடத்த முயற்சி செய்து வருகிறது. ஆனால் விஜய் சரியான தகவல்களை தெரிந்து கொண்டு சிந்தித்துப் பேச வேண்டும். ஏனெனில் அவரது பயணம் மிகவும் சிறப்பாக அமைய வேண்டும். அரசியலில் சிந்தித்து பேசுவது மிகவும் நல்லதாகும் என செய்தியாளர்களிடம் சரத்குமார் தெரிவித்துள்ளார்.