உத்தரப்பிரதேசம் ஹாபூர் மாவட்டத்தில், 50 வயதான ஒரு பெண் ஆம்புலன்ஸிலேயே தனது 14வது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பில்குவா பகுதியில் வசிக்கும் இமாமுதீனின் மனைவி குடியா எனும் பெண், பிரசவ வேதனையால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் பில்குவா CHC மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கிருந்து மீரட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டதால், மாநில சுகாதாரத்துறையின் 108 ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு வந்தது. மீரட்டுக்குச் செல்லும் வழியிலேயே குடியாவின் பிரசவ வேதனை அதிகரிக்கத் தொடங்கியது. உடனே EMT கர்மவீரும், ஆம்புலன்ஸ் சாரதி ஹமேஷ்வரும் ஆம்புலன்ஸை நிறுத்தி, அதில் இருந்த டெலிவரி கிட் உதவியுடன் அவசரமாகப் பிரசவம் நடத்தினர்.

இதில், குடியா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு, தாயும் குழந்தையும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனையின்போது, இருவரும் நலமாக உள்ளதாகவும், எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனவும் மருத்தவர்கள் உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவமனைவின் CMS மருத்துவர் ஹேமலதா கூறுகையில், “இமாமுதீனின் மனைவி குடியா எனும் பெயரில் ஒரு பெண் ஆம்புலன்ஸில் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார்.

ஆனால் அவருக்கு ஏற்கனவே பிரசவம் நடந்துவிட்டது. எங்கள் மருத்துவ குழுவினர் உடனே அவர்களை உள்நோயாளர் பிரிவில் சேர்த்தனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர்,” என்று தெரிவித்தார். பிரசவத்தின் போது, குடியாவின் 22 வயதான மகனும் மருத்துவமனையில் இருந்தார்.