
இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஆதார் அட்டை எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் உடனடியாக ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆதார் அட்டை என்பது அனைத்து விதமான அத்தியாவசிய தேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஆதார் அட்டை வழங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டால் தங்களுடைய அடையாள போட்டோ, முகவரி ஆவணங்கள் போன்றவற்றை புதுப்பிக்க வேண்டும்.
ஆதார் அட்டையை புதுப்பிப்பதன் மூலம் துல்லியமாக தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் சேவைகளை சிரமமின்றி பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்றால் மை ஆதார் இணையதளத்திற்குள் சென்று https://www.myaadhaar.uidai.gov.in/என்ற முகவரியில் ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த தளத்தில் பொதுமக்கள் ரூபாய் 25 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைன் சென்டருக்கு சென்றால் ரூபாய் 50 வரை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். மேலும் தொலைபேசி மற்றும் குறுந்தகவல்கள் மூலம் ஆதார் குறித்து தகவல்களை கேட்டால் யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் எனக் கூறியுள்ளார்.