தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர் பேசியதாவது, திருச்சியில் 1956-ஆம் ஆண்டு அண்ணா வரலாற்று மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டின் போது நான் திருச்சிக்கு வந்திருந்த நிலையில் தற்போது 62 வருடங்களுக்குப் பிறகு 86 வயது இளைஞனாக திருச்சி மாநாட்டுக்கு வந்துள்ளேன். அரசியல் தலைவர்களின் அடிப்படை குணம் நம்பிக்கை.

அப்படி நம்பிக்கைகுரியவராக ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு மூன்று முறை முதல்வர் பதவியை பெற்றவர் ஓ. பன்னீர்செல்வம் மட்டுமே. காலில் விழுந்து விட்டு காலை வாரியோ அல்லது வரம் கொடுத்தவரின் தலையிலோ கை வைக்கும் பழக்கம் பன்னீர்செல்வத்துக்கு கிடையாது. பெரும்பான்மை என்ற பெயரில் பொது குழு மற்றும் தலைமை கழக நிர்வாகிகளை கையில் வைத்துக்கொண்டு இயக்கத்தை அபகரித்தவர்களை தர்மம் மற்றும் அறத்தை வைத்து விரட்டி அடிப்போம். நம்பிக்கை துரோகிகளுக்கு சாவு மணி அடிப்பதற்காகவே இங்கு உண்மை தொண்டர்கள் இருக்கிறார்கள். எம்ஜிஆர் இருந்த வரை அவருடன் இறுதிவரை இருந்தேன். அதேபோன்று உங்களுடனும் இறுதிவரை இருப்பேன் என்று கூறினார்.