பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள பட்டுவா டோலி கிராமம், ஒரு காலத்தில் நெசவுத் தொழிலுக்காக பிரபலமாக இருந்தது. இன்று, அந்த கிராமம் ‘ஐஐடிக்களின் கிராமம்’ என அழைக்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த ஆண்டில் மட்டும் அந்த கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் JEE Main தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 28 பேர் ‘விக்ஷா சன்ஸ்தான்’ என்ற இலவச கோசிங் மையத்தில் பயின்றவர்கள். இந்த மையத்தை முன்னாள் ஐஐடிக்கள் இயக்கி வருகிறார்கள்.

1991-ஆம் ஆண்டு ஜிதேந்திர பட்டுவா என்ற இளைஞர், பட்டுவா டோலியில் இருந்து முதல் முறையாக IITயில் சேர்ந்தார். அவரே இந்தக் கல்விப் புரட்சிக்கு அடித்தளம் போட்டவர்.

தற்போது அமெரிக்காவில் வாழும் ஜிதேந்திர, ‘Vriksh We The Change’ எனும் அமைப்பை நிறுவி, இலவச கல்வி சேவைகள் மூலம் கிராம மாணவர்களுக்கு உதவி செய்கிறார்.

இதனால் தான் ஆன்லைன் வகுப்புகள், இலவச புத்தகங்கள், மற்றும் IIT பட்டதாரிகளின் வழிகாட்டுதலால், மாணவர்கள் IIT, JEE, NEET போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுகின்றனர்.

பட்டுவா டோலியில் பெரும்பாலான குடும்பங்கள் இன்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டாலும், அவர்களது பிள்ளைகள் கல்வி வழியாக புதிய உலகத்தை நோக்கி பயணிக்கின்றனர். இந்த ஆண்டில் வெற்றி பெற்ற மாணவர்கள் பலரும் 95%-க்கும் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

இப்போது அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இன்ஜினியர் இருப்பது வழக்கம் ஆகிவிட்டது. பட்டுவா டோலி இன்று இந்தியாவில் கல்வி புரட்சி நடத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.