தேசிய தொழில்நுட்ப நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய அரசின் நிதி உதவி பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளால் நிதி உதவி அளிக்கப்பட்ட (அ) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ (JEE) ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வு வருடத்துக்கு 2 முறை நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்ற ஜனவரி மாதம் 24ம் தேதி துவங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சம் மாணவர்கள் பதிவுசெய்திருந்த நிலையில், 95.8 சதவீதம் பேர் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது இத்தேர்வின் முடிவுகள் இன்று(பிப்,.6) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியத் தேர்வு முகமையால்(NTI) நடத்தப்படும் ஜேஇஇ முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடையும் மாணவர்கள், நாட்டிலுள்ள என்ஐடி மற்றும் ஐஐடி ஆகிய மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்பில் சேரலாம். அதேசமயம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்து முதல் 2.5 லட்சம் இடத்தை பெறுபவர்கள், ஐ.ஐ.டி.யால் நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் கலந்துகொள்ளும் தகுதியை பெற்று ஐஐடியில் சேர்வதற்கான வாய்ப்பை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.