
சென்னை காரப்பாக்கத்தில் வசிக்கும் நடிகர் கருணாகரன் வீட்டில் ஏற்பட்ட திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரும், அவரது மனைவி தென்றல் ராஜேந்திரனும் வாழ்ந்த வீட்டில் 59.7 சவரன் நகைகள் மாயமாகியது. இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நகைகள் கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரை சிறுகச் சிறுக மாயமானதாக கூறப்படுகிறது.
புகாரின் பேரில், கண்ணகி நகர் போலீஸார் விசாரணையை தொடங்கினர். வீட்டு பணியாளர்களிடம் விசாரணை நடத்தியபோதும், எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் உள்ள அனைவரின் கைரேகைகளைப் பதிவு செய்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் வீட்டு வேலை செய்து வந்த விஜிலா மேரி என்ற பணிப்பெண்ணின் கைரேகை சந்தேகத்திற்கிடமானது. விஜிலா மேரியை தீவிரமாக விசாரித்தபோது, அவர் நகைகளைத் திருடியதை ஒப்புக் கொண்டார். தாமதமின்றி போலீஸார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட 59.7 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.