பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது மும்மொழிக் கொள்கை குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் செயல்படும் பல தனியார் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை உள்ளது. ஏன் மும்மொழிக் கொள்கை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக பள்ளிகள் எத்தனை பள்ளிகளில்  மும்மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றன என்பதை தெளிவாக சொல்லுங்கள். முதலமைச்சர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள் தனியார் பள்ளிகள், பிரபலங்கள் நடத்தும் பள்ளிகள் என அனைத்து தனியார் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கை இருக்கிறது.

அதனை நான் இந்தி என சொல்லவில்லை. மூன்றாவதாக ஒரு இந்திய மொழி. இதனை ஏன் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மறுக்கிறீர்கள். மூன்றாவது மொழியை 8 வயதிற்குள் ஆரம்பித்தால் தான் அவர்களால் அந்த மொழியை முழுவதுமாக கற்றுக் கொள்ள முடியும். வளர்ந்து வரும் உலகத்தில் இன்னொரு மொழி தெரிந்தால் தான் என்ன? குழந்தைகள் படிக்கிறேன் என்று கூறுகிறார்கள். பெற்றோர்கள் படிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை?. படிப்பு என்றாலே திமுக விற்கும், திராவிட மாடலுக்கும் பிரச்சனைதான். பல குழந்தைகளின் பெற்றோர் கேந்திரிய வித்யாலயாவில் இந்தி சொல்லிக் கொடுப்பதால் அங்கு படிக்க வைக்கிறோம் எனக் கூறுகின்றனர்.

நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. திணிக்கிறோம் என நீங்கள்தான் மக்களுக்கு திணிப்பை கொடுக்கிறீர்கள். மற்றொரு மொழியை அரசு பள்ளி மாணவர்களும் கற்றுக் கொள்வதை தொடர்ந்து இறுமாப்புடன் இவர்கள் மறுத்து வருகிறார்கள். சாமானிய மக்களை மூன்றாவது ஒரு மொழி படித்து கொள்ளுங்கள் என சொல்வது ஆணவமா? சாமானிய மக்களை நாங்கள் படிக்க விடமாட்டோம் என சொல்வது ஆணவமா? முதலமைச்சர் எப்பொழுதுமே ஆக்டிங்கிலும், ஷூட்டிங்கிலும் இருந்தால் மட்டுமே மக்களை அணுக முடியும் என ஒரு கோட்பாட்டை எடுத்திருக்கிறார்.

பாஜக 2026 ஐ நோக்கி பலமாக வெற்றி நடை போட்டு வருகிறோம். வாய்ப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். வேலை வாய்ப்பை பெறுவதற்காக குழந்தைகளுக்கு மூன்றாவது ஒரு மொழியை கற்றுக் கொள்வது சிறந்ததாகும். படிப்பதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக் கொடுக்க கல்வித்துறை இருக்கிறது. இதில் திமுக அரசிற்கு என்ன பிரச்சனை?.கல்வி பாதிப்பை ஏற்படுத்துவது மத்திய அரசு கிடையாது தர்மேந்திர பிரதான் கிடையாது. அன்பில் மகேஷ் மற்றும் மு.க. ஸ்டாலின் தான் மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார்.