புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குறும்பூர் மேடு சாலையில் தீபாவளி அன்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த கார் ஒன்று நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் அந்தக் காரில் 150 கிலோ கஞ்சா இருந்தது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வண்டியில் உள்ள மூவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் காரில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

இதனை இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர். இந்தக் கடத்தலில் ஈடுபட்ட நாகராஜ் (20), தவமுருகன் (26), ஸ்டாலின் (36) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் இருந்த நான்காவது நபர் தப்பி ஓடி உள்ளார். இவரது பெயர் ராகுல் என்பது விசாரணையில் தெரிய வந்தது. தப்பி ஓடிய ராகுலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காரில் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.