விடுமுறை என்றாலே கொண்டாட்டம்தான்…..அந்த வகையில் மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் விடுமுறை என்றால் குஷி ஆகிறார்கள். அதன்படி ஏப்ரல் 7 ம் தேதி தென்காசி மாவட்டத்தில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஏப்ரல் 11 ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவும் இருக்கிறது. இதனால் 7 மற்றும் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஏப்ரல் 7 மற்றும் 11 ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவித்தார். பள்ளி கல்லூரிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றும் சார்நிலை கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலம் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்பட வேண்டும் என்றும் கூறி இருந்தார். மேலும் இந்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறையை ஈடு செய்வதற்காக ஏப்ரல் 26 ஆம் தேதி மற்றும் மே 3ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.