
சென்னையில் இயங்கும் மின்சார ரயில்களில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். மேலும் நள்ளிரவு நேரங்களிலும் ரயில் பயணமே அவர்களுக்கு கை கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் பணி முடித்துவிட்டு பழவந்தாங்கலிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பகுதியில் நள்ளிரவில் இருட்டான பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் அவரிடம் செயின் பறித்ததாக கூறப்பட்ட நிலையில் இது பற்றி பெண் போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் வாலிபர் அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை முயற்சி செய்தது அம்பலமாகி உள்ளது.
மேலும் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறும் பகுதியில் இருட்டாக உள்ள இடத்தில் மறைந்திருந்த மர்ம வாலிபர் பெண் காவலரின் வாயை பொத்தி அவர் மீது ஏறி அமர்ந்து கொண்டு பாலியல் வன்கொடுமை முயற்சி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் திருப்பத்தூர் கே.வி குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்ப்பிணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் அரங்கேறிய சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்னரே மீண்டும் மின்சார ரயிலில் பயணம் செய்த பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறல் அரங்கேறி இருக்கும் சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது,