
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் உள்ளதால், அங்கிருந்து தினமும் 250-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கற்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த லாரிகள் வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி வழியாக செல்வதால் சாலை பழுதடைந்த நிலையில், எல்லையில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனையடுத்து ஒரு அறிவிப்பு பலகையானது வீரப்பகவுண்டனூர் சோதனை சாவடி அருகில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு பொதுப்பணித்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள அதில் 10 டன்னுக்கு மேல் பாரம் ஏற்றி வரும் லாரிகள் இங்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலையாள மொழியில் எழுதப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சோதனை சாவடி வழியே கேரளாவிற்கு வரும் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதனால் அந்த சோதனை சாவடி வெறிச்சோடி காணப்படுவதால் நிம்மதி அளிப்பதாக தமிழக-கேரள எல்லையில் உள்ள பொதுமக்கள் கூறியுள்ளனர். எனவே கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் வாளையார் வழியாக இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவிற்கு சென்று வருவதாக கூறப்பட்டுள்ளது.