
குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவின் கரேலி பார்க் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று அதிவேகமாக ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அம்பரபாலி வளாகத்திற்கு அருகே கார் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்துள்ளது. இதனால் கார் சாலையில் பைக்கில் வந்த பெண் ஒருவரை இடித்து தூக்கி வீசியது. மேலும் சாலையில் நின்ற ஐந்து பேருக்கு பலத்த படுகாயம் அடைந்துள்ளது. இந்த விபத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மற்றும் பைக் வாகனங்களும் சேதம் அடைந்தன.
இதனை அடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தை ஏற்படுத்திய இளைஞரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவருடன் இருந்த மற்றொருவர் தப்பி ஓடியதால் அவரைத் தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. விபத்து ஏற்படுத்திய கார் டியான் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இந்த நிலையில் விபத்து ஏற்படுத்திய இளைஞர் ரஷீத் சௌராஷியா (20) என்பது தெரியவந்துள்ளது. இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவர். இவரது நண்பர் பிரன்ஷு. தற்போது தலைமறைவாகிய பிரன்ஷுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ரஷீத் மற்றும் அவரது நண்பரும் விபத்து ஏற்படுத்துவதற்கு முன்பாக காரில் இருந்து புறப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோவில் காரை இயக்குவதற்கு முன்பாக ரஷீத் ஒரு பாட்டிலில் உள்ள பானத்தை அருந்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அந்த பாட்டிலில் உள்ளடக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிரன்ஷு தான் காரை முதலில் இயக்கியதாகவும், அதன் பின்னர் ரஷித் காரை இயக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் ரஷீத் தான் மது போதையில் இல்லை என்றும் 50 கிலோமீட்டர் வேகத்தில் தான் காரை ஓட்டினேன் எனவும் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் மது போதையில் உள்ளூர் மக்களிடம் பிரச்சனை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்