
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர்கள் கைது செய்யப்பட்டு விமான மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவில் அன்னியர் பிரிவு சட்டம் 1940 அமலில் உள்ளது.
அதன்படி 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் முறையாக பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டம் கடந்த 11ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள் 30 நாட்களுக்குள் தாமாக வெளியேற வேண்டும் என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியதாவது, அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேலாக தங்கி இருக்கும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களது விவரங்களை உடனடியாக உள்துறை பாதுகாப்பு அரசு அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது அபராதம் சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நீங்களாகவே வெளியேறினால் பாதுகாப்பானது. அப்போது நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும், நீங்கள் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளலாம். அதோடு மீண்டும் அமெரிக்காவுக்கு வர முடியும். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும்.
இந்த முடிவு அமெரிக்காவில் எச்-1 பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது. எச்-1 பி விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்து இருந்தால், அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு வெளிநாட்டவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.