உத்திரபிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ஒரு பெண்ணை அவருடைய முன்னாள் காதலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் போல் வேடமிட்டு தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஃபாரா பகுதியில் ரேகா என்பவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய முன்னாள் காதலன் உமேஷ். இந்நிலையில் ரேகாவை பார்ப்பதற்காக அவருடைய முன்னாள் காதலன் உமேஷ் ஹரியானாவில் இருந்து வந்தார். அவர் ரேகாவின் வீட்டை நோட்டமிட்ட நிலையில் சரியாக யாரும் இல்லாத நேரம் பார்த்து பெண் போன்ற வேடமணிந்து வீட்டிற்குள் புகுந்தார்.

அப்போது தனியாக இருந்த ரேகாவை அவர் தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பினார். ஆனால் அதனை ஏற்க ரேகா மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் ரேகாவை உயிரோடு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டார். இதைத் தொடர்ந்து ரேகாவின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரது வீட்டிற்கு ஓடி வந்தனர். இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த உமேஷ் மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றார். அப்போது அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதில் ரேகாவின் நிலைமை கவலைக்கிடமானதாக இருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ரேகா உமேஷூடன் தன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுத்த நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து ரேகா மீட்கப்பட்டார். இதைத் தொடர்ந்து மீண்டும் ரேகாவை அவர் அழைத்துச் செல்ல விரும்பிய நிலையில் ரேகா மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் இதனால் தான் கோபத்தில் ரேகாவை தீவைத்து எரித்தது தெரியவந்துள்ளது.