
டெல்லியில் உள்ள மக்களவை உறுப்பினரின் தனிப்பட்ட செயலாளரான ஒருவர் கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று, தனது மகளுக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றார். சென்னை முதல் கும்பகோணம் வரை பயணிக்க தேவையான டிக்கெட்டை ஒரு மொபைல் அப்ளிகேஷன் மூலம் முன்பதிவு செய்ய முயன்ற போது, அந்த டிக்கெட்டுக்கு தேவையான பணம் எடுக்கப்பட்டது. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் அவர் இணையதளத்தில் ஹெல்ப்லைன் எண்ணை தேடி அதற்கு தொடர்பு கொண்டார். அப்போது அவர் போலியான எண்ணை அழைத்து விட்டார்.
இதனால் மோசடிக்காரர்கள் அவரது வங்கி விவரங்களை எடுத்து, அதில் ரூ.1.28 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை திருடி விட்டனர். இந்நிலையில் தான் மோசடிக்குள்ளாகிருப்பதை தெரிந்த அவர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இணையதளத்தில் ஆளில்லா ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தும் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், பயணிகள் மற்றும் பொதுமக்கள் இது போன்ற சூழ்நிலைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.