லொள்ளு சபா ஆண்டனி காலமானார் – திரையுலகமும் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை நிகழ்ச்சி லொள்ளு சபாவின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் ஆண்டனி இன்று (ஏப்ரல் 9, 2025) அதிகாலை காலமானார். நீண்ட காலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், அதிகாலையில் உயிர் நீத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை, அவருடன் லொள்ளு சபாவில் இணைந்து நடித்த பழனியப்பன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். “லொள்ளு சபா ஆண்டனி இன்று அதிகாலை கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்” என்று பதிவிட்டுள்ளார். அவரது மறைவு திரையுலகினரும், லொள்ளுசபா ரசிகர்களுமாக அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அவர் ஒரு பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தவறான நட்புகளால் தனது வாழ்க்கை சீரழிந்துவிட்டதாகவும், சிலர் மட்டுமே உதவி செய்து வந்ததாகவும் வருத்தத்துடன் கூறியிருந்தார். லொள்ளு சபா நிகழ்ச்சி தான் தனது வாழ்க்கையை மாற்றிய நிகழ்ச்சி என்றும், அந்த நிகழ்ச்சியின் வெற்றியால் தான் பரவலான பிரபலத்தைப் பெற்றதாகவும் கூறியிருந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற லொள்ளு சபா ரீயூனியன் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்காததை வைத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், அவரை மீண்டும் தேடி அறிய தொடங்கியிருந்தனர். இன்று அவரது இறப்பு செய்தி சமூக வலைதளங்களில் பரவியதோடு, அவரது கடந்த கால நகைச்சுவை காட்சிகள் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன.