பீகார் மாநிலத்திலுள்ள பாட்னாவில் டெய்லி சாலையில் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவில் இருந்து புலிகள், எட்டு முதலைகள், பிற அறிய உயிரினங்கள் ஆகியவை பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விலங்குகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

இந்த லாரி தெலுங்கானா மாவட்டம் நிர்மல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு கல்லில் மோதி கவிழ்ந்தது. அப்போது லாரியில் உள்ளே இருந்த இரண்டு முதலைகள் வெளியே தப்பி சென்றது. இதனைப் பார்த்த லாரி ஓட்டுநர் உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் முதலைகளை தீவிரமாக தேடி வந்தனர்.

அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்தனர். வெகு நேர தேடுதலுக்குப் பிறகு இரண்டு முதலைகளை வனத்துறையினர் கைப்பற்றி அனைத்து விலங்குகளையும் வேறொரு லாரியில் ஏற்றி பாதுகாப்பாக பெங்களூரு பூங்காவிற்கு அனுப்பி வைத்தனர். முதலை தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.