கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் குமார் (50)-கவிதா. இவர்களுக்கு 17 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதியரின் மகள் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் இரு வீட்டாரின் சம்மதத்துடன் அந்த சிறுமிக்கும், இளைஞருக்கும் திருமணம் நடைபெற்று உள்ளது.

ஆனால் அந்தச் சிறுமி வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இளைஞரின் குடும்பத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது குழந்தை திருமணம் என்பதால் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உறவினர்கள் புகார் அளித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி பூச்சி மருந்து குடித்த தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குழந்தை திருமண வழக்கில் சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த குமார் மற்றும் அவரது மனைவி கவிதா இருவரும் முன் ஜாமின் பெற சென்னை ஐகோர்ட்டுக்கு செல்வதாக கூறியுள்ளனர். அதன் பின் இருவரும் திருப்பத்தூருக்கு வந்துள்ளனர். அங்கு மௌக்காரன்பட்டி கீழ்குறும்பர் தெரு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு சென்று மகளின் திருமண வாழ்க்கையால் விரக்தி அடைந்த தம்பதியினர் இருவரும் அப்பகுதி வழியாக வந்த ரயில் முன் பாய்ந்துள்ளனர்.

ரயில் வேகமாக மோதியதில் தம்பதியினர் இருவரும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் காதல் திருமணத்தால் ரயில் முன் பாய்ந்து தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.