திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு சிறுமி 7-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த 16-ஆம் தேதி சிறுமியும், அவரது தோழிகளும் செல்போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். அந்த செயலி மூலம் மர்ம நபர் ஒருவர் சிறுமியை தொடர்பு கொண்டு என் செல்போன் நம்பர் அனுப்புகிறேன். அதில் வீடியோ கால் மூலம் ஐ லவ் யூ என்று சொல்ல முடியுமா என கேட்டுள்ளார். அந்த சிறுமியும் விளையாட்டாக ஐ லவ் யூ என கூறி ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். அந்த நபர் அந்த வீடியோவை யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

அந்த வீடியோவை 4000 நபர்கள் பார்த்துள்ளனர். மேலும் சிறுமியின் பெற்றோர் அதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பெற்றோர் கேட்டபோது அந்த நபர் தொடர்ந்து தன்னை தொந்தரவு செய்வதாக சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது சிறுமியை தொந்தரவு செய்தவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ் ராம்(23) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.