
அன்பென்னும் ஆயுதம் பாடலை எழுதிய அனுபவம் குறித்து அப்பாடலை எழுதிய விஷ்ணு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அக்டோபர் 19 வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான மூன்றாவது பாடல் அன்பென்னும் ஆயுதம் நேற்று முன்தினம் வெளியானது. இதற்கு முன்பாக அதிரடியாக வெளியான நான் ரெடி தான் மற்றும் BADASS உள்ளிட்ட பாடல்கள் வெற்றி பெற்றதைப் போலவே இந்த பாடலும் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது. கேட்பதற்கு இனிமையாக இருப்பதாகவும், மனதை வருடும் பாடலாக இருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை இப்பாடல் குறித்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாடலை எழுதிய விஷ்ணு அது குறித்த அனுபவத்தை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், விஜய் சார் அப்போது தான் எடிட் பண்றத பார்க்கிறதுக்காக வந்தாரு. அப்போது பேப்பர் மற்றும் பேனாக்களை எடுத்து கொண்டு நான் செல்லும் போது என்னை அழைத்து எங்கடா போற என கேட்டார்.
அதற்கு நம்ம படத்திற்கு நான் தான் பாடல் எழுதுகிறேன் எனக் கூறிய அடுத்த நொடியே, சூப்பர் டா வாழ்த்துக்கள் என தெரிவித்தார். விஜய் அவர்கள் மிகவும் அன்பானவர். அவர் கையில் ஒரு ஆயுதம் ஒன்றை எடுத்தாரே ஆனால் அது அன்பு ஒன்றாக மட்டுமே இருக்கும். படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்திற்கும் அது நன்றாக செட் ஆனது. இப்படித்தான் அன்பென்னும் ஆயுதம் பாடல் உருவானது என தெரிவித்துள்ளார்.