
மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாசாத்தியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, கம்பர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி போன்ற 5 பள்ளிகளில் நவீன வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரு.வி.க.மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நவீன வகுப்பறைகளின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் தலைமை தாங்கினார். பின் மேயர் இந்திராணி முன்னிலை வகிக்க, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார். மேலும் துணை மேயர் நாகராஜன், கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.