
உத்திர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவில் 65 கோடிக்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13 ம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடைபெற்றது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் சட்டசபை கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா வருமானம் குறித்து கூறியுள்ளார்.
அதில் படகோட்டி ஒருவர் கிட்டத்தட்ட ரூ. 30 கோடி வரை சம்பாதித்ததாக கூறினார். அதாவது அந்த படகோட்டிக்கு மொத்தம் 130 படகுகள் உள்ளது. இதன் மூலம் அவர் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் முதல் 52 ஆயிரம் வரை வருவாய் ஈட்டியுள்ளார். அந்த வகையில் அவருக்கு 45 நாட்களில் ரூ. 30 கோடி வருமானம் கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் 2025-2026 வருடத்திற்கான மாநில பட்ஜெட் குறித்தும் அவர் பேசியுள்ளார். மேலும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு நன்மை தரும் வகையில் அரசு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றார்.