உத்திர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதனால் சாலை நெரிசல், ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் மதுபனி இரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அன்று கூட்டம் அலைமோதியது. அவர்கள் அனைவரும் மகா கும்பமேளா செல்ல உள்ளனர். அப்போது அங்கு வந்த ஸ்வதந்திர சேனாணி எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே நிரப்பப்பட்டு வந்திருந்தது.

அதில் பக்தர்கள் ஏறுவதற்கு இடமே இல்லை. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் ஒருவர், அந்த ரயிலின் ஏசி பெட்டியின் கண்ணாடியை கற்களை வீசி உடைத்தார். இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றார்.  இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தான் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.