பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டானாபூர் ரயில்வே கோட்ட மேலாளர் ஜெயந்த் காந்த் சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது டிக்கெட் இல்லாமல் சில பெண்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி, ஏன் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தீர்கள் என்று மேலாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் நாங்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மோடி ஜி கூறினார் என்று பெண்கள் நம்பிக்கையுடன் பதிலளித்தனர்.

இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஜெயிந்த் காந்த் சவுத்ரி, சிரித்தபடியே மேலும் உரையாடினார். அப்போது இந்த பெண்கள் டிக்கெட் எடுக்காமல் மகா கும்பமேளா நிகழ்வுக்கு சென்று வந்ததும் தெரிய வந்தது. அதன் பின் மேலாளர் அந்தப் பெண்களிடம் பிரதமர் மோடி அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது ரயில்வே சட்டங்களுக்கு எதிரானது என்றும் அமைதியாக தெளிவுபடுத்தினார். இதனை ரயில் நிலையத்தில் உள்ள மற்றொருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.