மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் ஆர்.ஜி கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் டாக்டர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் பெண் டாக்டர் கொலை வழக்கு நீதி கேட்டு 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்.ஜி கார் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஜூனியர் டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஜூனியர் டாக்டர்களின் வேலை நிறுத்தம் காரணமாக விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் 2 லட்ச ரூபாய் நிதி நிவாரணமாக வழங்கப்படும் என மம்தா கூறியுள்ளார்.