இஸ்ரேலின் ஹடேரா நகரம் அருகே உள்ள ஓல்கா கடற்கரையில், ஏப்ரல் 21ஆம் தேதி சுறாக்களால் கடலுக்குள் இழுக்கப்பட்டதாக கூறப்படும் நபரின் சடலம், அதற்கு அடுத்த நாள் 22ஆம் தேதி, தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் மீட்கப்பட்டது.  அந்த நபர் நீந்திக் கொண்டிருந்தபோது சுறாக்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடற்கரையில் அவரது சைக்கிள் மற்றும் பை போன்ற உடைமைகள்  கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது, 36 மணி நேர துரித தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் பின்னர் அந்த நபரின்  சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினர். மேலும் அந்த நபரின் சடலம் தற்போதைய நிலையில் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், அது அபு கபிர் நீதியியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. “அது குறித்த பல சாட்சிகள் பரிசோதிக்கப்படுகின்றன, நாங்கள் நபரின் குடும்பத்திற்கு முடிவுகள் அளிக்க உறுதியுடன் செயல்படுகிறோம்” என காவல் துறை அதிகாரிஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம், இஸ்ரேலில் நடந்த நான்காவது சுறா தாக்குதல் என்றாலும், இது மிகவும் கொடூரமான தாக்குதலாகும். சமீபத்திய சம்பவங்களை தொடர்ந்து  சுற்றுலா பகுதிகளில் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளன.

இதனையடுத்து இஸ்ரேல் இயற்கை மற்றும் பூங்கா ஆணையம் மற்றும் காவல் துறையினர் இணைந்து, “சுறாக்கள் பாதுகாக்கப்படும் உயிரினங்கள், அவற்றின் அருகே செல்ல வேண்டாம், பாதுகாப்பு எச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்” என பொதுமக்களுக்கு  அறிவுறுத்தி வருகின்றனர்.