கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவைப்புதூர் தில்லைநகர் 2-வது வீதியில் சங்கீதா என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் மோதிலால் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சங்கீதா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த போது ஒரு வாலிபர் கூரியர் தபால் வந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும் உங்கள் வீட்டில் நாய் இருப்பதால் வெளியே வந்து தபாலை வாங்கி கொள்ளுங்கள் என அந்த நபர் கூறியுள்ளார். இதனால் சங்கீதா வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த வாலிபர் சங்கீதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயற்சி செய்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா நகையை பிடித்தபடி கூச்சலிட்டதால் அந்த வாலிபர் கத்தியால் சங்கீதாவின் தோள்பட்டையில் குத்தி விட்டு பொதுமக்களிடம் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக தப்பி ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சங்கீதாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கூரியர் தபால் கொடுப்பது போல சென்று பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.