
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் பகுதியில் கருப்பசாமி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காந்திமதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் இருக்கும் லாட்ஜில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் லாட்ஜிலேயே தங்கி இருந்தார்.
இந்நிலையில் லாட்ஜில் இருக்கும் ஒரு அறையில் கருப்புசாமி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த லாட்ஜ் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
வழக்கமாக கருப்பசாமி ஆட்கள் இல்லாத போது மேற்கத்திய கழிவறையை பயன்படுத்தி வந்துள்ளார். அதேபோல் ஆட்கள் இல்லாத அறையில் இருக்கும் கழிவறையை பயன்படுத்திவிட்டு வெளியே வந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து கருப்புசாமி இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.