நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்த ஜெனிபர் கிளாடிஸ் (வயது 35) என்பவர், கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் மீன் வியாபாரியான அலி (வயது 38) என்பவரும், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் குடியிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கள்ளத் தொடர்பு நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிக்கடி அலி, ஜெனிபர் கிளாடிஸ் வீட்டுக்குச் சென்று நேரம் கழித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜெனிபர் கிளாடிஸ் அலியை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தி வந்தார். நேற்று இரவு, வழக்கம்போல் அலி கிளாடிஸ் வீட்டிற்கு சென்ற போது, அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது, கிளாடிஸ் மீண்டும் திருமணக் கோரிக்கையை முன்வைத்ததால், ஆத்திரம் அடைந்த அலி தன்னுடன் எடுத்துச் சென்ற கத்தியால் கிளாடிஸின் கழுத்தும், கைகளிலும் வெட்டி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே கிளாடிஸ் உயிரிழந்தார்.

பின்னர் அலி, கத்தியுடன் நேராக கூடலூர் காவல் நிலையம் சென்று சம்பவத்தை போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் அவரை உடனடியாக கைது செய்தனர். தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று, ஜெனிபர் கிளாடிஸின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம், அருகிலுள்ள பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை நீடிக்கிறது.