
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புனித் ஜாங்கிர் என்பவர் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். பயின்று வருகிறார். இவருடைய விலை உயர்ந்த செல்போன் கடந்த 2 மாதங்களுக்கு முன் காணாமல் போனதாக தெரிகிறது. உடனே இச்சம்பவம் குறித்து நெல்லை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரனிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது செல்போன் இருக்கும் இடம் திருப்பத்தூர் மாவட்டம் உமராபாத் பகுதி என கண்டறியப்பட்டது. இதன்பின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வந்த போலீசார் செல்போனை திருடி வைத்திருந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (23) என்பவரிடம் இருந்து பணம் கொடுத்து விலைக்கு வாங்கியதாக அவர் கூறியுள்ளார்.
அதன் பின் போலீசார் இது தொடர்பாக செல்போன் வைத்திருந்த லோகேசை விசாரித்தனர். அப்போது லோகேசுக்கு ஆதரவாக சங்கராபுரம் கிராம மக்கள் திரண்டு செல்போனை லோகேஷ் திருடவில்லை என்றும் அவரிடம் விசாரிக்கக்கூடாது என கூறியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசாரின் பிடியிலிருந்துஅவர் நைசாக தப்பி ஓடிவிட்டார். மேலும் இதுகுறித்து மேல்பட்டி போலீசார் உதவியுடன் திருநெல்வேலி போலீசார், தப்பியோடிய லோகேஷை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.