பீகார் மாநிலத்தை சேர்ந்த விவேக் குமார் என்பவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணி நிமித்தமாக திருவனந்தபுரத்தில் சான்றிதழ்களை சரி பார்த்துவிட்டு, மதுரையில் மருத்துவ பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து விவேக் குமார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து விஜயவாடா செல்வதற்காக கோரமண்டல் எக்ஸ்பிரஸில் ஏறி உள்ளார்.

அந்த ரயில் கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் அருகே மெதுவாக சென்றபோது கதவு ஓரத்தில் நின்று விவேக் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்த நபர் பெரிய கம்பால் தாக்கி விவேக்கிடம் இருந்த செல்போனை பறித்தார். இதனால் நிலைதடுமாறி ஓடும் ரயிலில் இருந்து விவேக் கீழே விழுந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்டு ஏறுவதற்குள் ரயில் வேகமாக சென்றுவிட்டது.

இதற்கிடையில் செல்போனை பறித்த நபரும் தப்பி சென்றார். இந்நிலையில் தனது உடைமைகள், சான்றிதழ்கள் ரயிலில் இருந்ததால் என்ன செய்வது என்று அறியாமல் விவேக்குமார் அந்த வழியாக வந்த பொதுமக்களின் கால்களில் விழுந்து தனக்கு உதவும் படி கதறி அழுது கெஞ்சினார். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து விவேக் செல்போன் எண்ணை வாங்கி தொடர்பு கொண்ட போது அவர் விழுந்த இடத்திலிருந்து 10 மீட்டர் இடைவெளி தூரத்தில் தண்டவாளம் ஓரத்தில் செல்போன் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக பொதுமக்கள் செல்போனை மீட்டு அவரிடம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் ஓங்கோல் ரயில்வே போலீசார் விவேக்குமாரின் உடைமைகளை எடுத்து வைத்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் ஓங்கோல் சென்று தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு விஜயவாடாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.